இந்தியா

எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ் - மாநில அரசியலில் கவனம் செலுத்த திட்டம்

Veeramani

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அகிலேஷ் யாதவ், செவ்வாய்க்கிழமையன்று சபாநாயகர் ஓம் பில்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இனி அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்துவார் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அவருடைய முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அகிலேஷ் யாதவ் கர்கல் தொகுதியில் வெற்றி பெற்றார். முதல்முறையாக அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.



அகிலேஷ் யாதவ் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராஜினாமா செய்யும் இரண்டாவது மக்களவை உறுப்பினர் ஆவார். ஏற்கனவே தற்போது உத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந் மான் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மக்களவையில் புதிதாக இரண்டு காலியிடங்கள் உருவாகியுள்ளதால் விரைவில் அகிலேஷ் யாதவின் ஆசம்கட் மற்றும் மானின் சங்ருர் தொகுதி ஆகியவற்றில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆம் வருட உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டதால் அவர் தனது கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.