வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார். எனினும், அவருடைய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி, தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல்களில் வாக்குத்திருட்டு நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த சூழலில் பாஜக குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவை தேர்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் என்று விமர்சித்தார்.
தேர்தல் ஆணையம் நோக்கி நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், போலீஸாரின் தடுப்புகளை தாண்டி குதித்து முன்னேறிச் செல்ல முயற்சித்தார். பின்னர் முறையாக அனுமதிபெறவில்லை எனக்கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அகிலேஷ் யாதவ், நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டும் வகையில் வாக்குரிமையை மறுப்பது, வாக்குப்பதிவில் முறைகேடு செய்வது உள்ளிட்டவற்றில், பாஜக ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் இந்த சதியை நாம் அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டுள்ள அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரை தன்வசப்படுத்தி, தனக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலை பாஜக உருவாக்குவதாகவும், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை நீக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.