சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரே நாளில் 13 சுரங்க ஒப்பந்தங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒப்புதல் அளித்ததாக சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
அகிலேஷ் யாதவ் 2012 முதல் 2016 வரை உத்திரபிரதேச முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் வசம் சுரங்கத் துறையும் இருந்தது. அப்போது, பல்வேறு சுரங்கங்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா, சமாஜ்வாடி எம்.எல்.சி ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ கடந்த சனிக்கிழமை 14 இடங்களில் சோதனை நடத்தினர். சுரங்கத்துறை அகிலேஷ் வசம் இருந்ததால் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என்று பேசப்பட்டது.
இது அரசியல் ரீதியான நடவடிக்கை என்று அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். சிபிஐ விசாரணையை சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மாயாவதி, அகிலேஷ் இடையிலான தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக செய்தி வெளியான உடனேயே சிபிஐ ஆய்வு நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், சுரங்க முறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்தும் சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. “அகிலேஷ் மொத்தம் 14 சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதில், 13 ஒப்பந்தங்களுக்கு 2013ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி ஒரே நாளில் அளித்துள்ளார். முதலமைச்சர் அலுவலகத்தின் ஒப்புதலுக்குப் பின்னர், ஹமிர்பூர் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதற்கான அனுமதியை அளித்தார். இணையவழி டெண்டர் விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன” என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் சிபிஐ ஆய்வு விவகாரம் எதிரொலித்தது. சமாஜ்வாடி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.