சரத் பவார், சுப்ரியா சுலே, அஜித் பவார் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | அஜித் பவார் மரணம்.. இனி NCP என்னவாகும்? எழும் பல கேள்விகள்.. மாற்றம் நிகழுமா?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (ஜன.28) காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.

Prakash J

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (ஜன.28) காலை விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மகாயுதி அரசாங்கத்தின் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (ஜன.28) காலை விமான விபத்தில் உயிரிழந்தார். பிரித்விராஜ் சவான், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் அமைச்சரவைகளில் ஆறு முறை துணை முதல்வராகப் பணியாற்றிய அஜித் பவாரின் எதிர்பாராத மரணம், மகாயுதி அரசாங்கத்தின் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தேசியவாத காங்கிரஸ் முகாமில் தலைமை மற்றும் வாரிசுரிமை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அஜித் பவார்

2023ஆம் ஆண்டு சரத் பவார் நிறுவிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் பிரித்து, அப்போதைய பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனா மகாயுதி கூட்டணியில் இணைந்தார். அப்போது பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். அதன்பிறகு, தேசியவாத காங்கிரஸையும் அதன் சின்னத்தையும் அஜித் பவார் கைப்பற்றினார். அதே வேகத்தில் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களை எதிர்கொண்டார். இதில் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், சட்டசபைத் தேர்தலில் அவருடைய கட்சி 41 எம்.எல்.ஏக்களைப் பெற்றது.

இந்தச் சூழலில் அவர் இல்லாதது ஆளும் மகாயுதியை நிலைகுலையச் செய்து, பிளவுபட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், தேசியவாத காங்கிரஸ் முகாமில் தலைமை மற்றும் வாரிசுரிமை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஏனெனில், சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் சரத் பவாரும், அஜித் பவாரும் இணைந்து பிம்ப்ரி-சின்ச்வாட்டில் போட்டியிட்டனர். மேலும், தேர்தலுக்குப் பிறகு இணைய வாய்ப்பிருப்பதாகவும் அஜித் பவார் ஆரூடம் தெரிவித்திருந்தார். இதையடுத்தே, அஜித் பவார் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் துணை முதல்வராக வருவார்? அந்தக் கட்சி என்னவாகும்? தலைவராக யார் பொறுப்பேற்பார்? இரண்டு தேசியவாத காங்கிரஸ் பிரிவுகளும் இணையுமா? முக்கியமாக, இந்த முக்கியமான கட்டத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்டையாடப்படாமல் ஒரே கூட்டணியாக இருக்குமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

அஜித் பவார், சரத் பவார்

அதேநேரத்தில், அஜித் பவாரின் மறைவு, தற்போது 83 வயதாகும் சரத் பவாருக்கும் ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) இரு பிரிவுகளையும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. தேசியவாத காங்கிரஸின் டெல்லி முகமாக சுப்ரியா சுலே அறியப்பட்டாலும், உள்ளூர் முகமாக அறியப்பட்டவர் அஜித் பவார். தவிர, அவருடைய கட்சிதான் தற்போது மாநிலத்தில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, பவார் குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் மகாராஷ்டிரா அரசியலுக்கும் ஒரு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.