மகாராஷ்டிராவில் பாஜகவோடு கூட்டணி ஏற்படுத்தியிருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று அந்தக் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
(அஜித் பவார்)
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், 105 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவும், 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து மொத்தம் 159 இடங்களுடன் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இதனால் மகாராஷ்ரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
(பட்னாவிஸ்)
இந்நிலையில் பாஜகவோடு கூட்டணி அமைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று அந்தக் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘பாஜகவோடு கூட்டணி ஏற்படுத்தி இருப்பது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. இதற்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல. அதற்கு கட்சியின் ஆதரவு கிடையாது’’ என்று தெரிவித்துள்ளார். அஜித் பவார், சரத்பவாரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.