மகாராஷ்டிரா எக்ஸ் தளம்
இந்தியா

மும்பை | மராத்தியில் பேச மறுத்த ஏர்டெல் ஊழியர்.. இந்தியில் பேசியதால் வெடித்த மொழி சர்ச்சை!

மும்பையில் உள்ள ஏர்டெல் சேவை மையத்தில் இருந்த ஊழியர் மராத்தியில் பேச மறுத்து இந்தியில் பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Prakash J

ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் சேவை குறைபாடு தொடர்பான புகாரை கூற சேவை மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த பணியாளர் மராத்தியில் பேச மறுத்ததுடன் இந்தியில் பேச முற்பட்டதாக அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர், "நான் மராத்தியில் பேச வேண்டும். நீங்கள் மகாராஷ்டிராவைச் சொந்தமாக்கிக் கொண்டீர்களா? நீங்கள் மகாராஷ்டிராவை வாங்கினீர்களா? எங்கு வாழ வேண்டும், எங்கு வாழக்கூடாது என்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியாது. மேலும் வீடியோ பதிவை நிறுத்துங்கள். ஒருவரைப் படம்பிடிக்க அனுமதி இல்லை. நான் போலீஸை அழைப்பேன். மகாராஷ்டிராவில் வாழ, நான் மராத்தி பேச வேண்டும் என்று நீங்கள் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்புகிறார். இந்த விவகாரம்தான் பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில், தனது பணியாளரின் செயல் குறித்து மராத்தி மக்களிடம் ஏர்டெல் நிர்வாகம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக மாநில மகளிரணி தலைவியும் சட்டமேலவை உறுப்பினருமான சித்ரா வாக் கூறியுள்ளார். இதுபோன்ற இடங்களில் மராத்தி தெரிந்தவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில், மராத்தி மொழி தொடர்பாக ஆர்.எஸ். எஸ். தலைவர் பய்யாஜி ஜோஷி, மும்பைக்கு ஒரே மொழி இல்லை என்றும், மும்பைக்கு வரும் மக்கள் மராத்தி மொழியை கற்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் கருத்து தெரிவித்திருந்தார். அவர், “மராத்திதான் நம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி; இந்த மாநிலத்தில் உள்ள அனைவரும் மராத்தியை கண்டிப்பாக கற்க வேண்டும்; மதிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியிலும் கலாசாரத்திலும் மராத்திக்கு முக்கியப்பங்குள்ளது” என தெரிவித்திருந்தார்.