இந்தியா

ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்க உத்தரவு..?

ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்க உத்தரவு..?

Rasus

ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தா‌ன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து‌ ஜம்மு காஷ்‌மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேடுதல் பணியும் தீவிரம் அடைந்தது. குறிப்‌பாக சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பாகிஸ்தான் ஆயுதக் கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையிலும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் ஸ்ரீநகர் பயணத்திற்கான பயணச்சீட்டு ரத்து உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களை ரத்து செய்வதாக பல்வேறு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவும் சூழலில், மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளிலும், உணவுப் பொருள்களை வாங்க கடைவீதிகளிலும் பெரும் தவிப்புடன் திரண்டுள்ளனர்.

இதனிடையே முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்துப் பேசினார். மேலும், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,‌ மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.