air india pt web
இந்தியா

58 டு 65.. விமானிகளின் ஓய்வு வயதை உயர்த்திய ஏர் இந்தியா!

ஏர் இந்தியா விமானிகளின் ஓய்வுபெறும் வயது, 58இல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Prakash J

விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் மற்றும் விபத்துகள் தொடர்பாக, கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா விமானம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. கடந்த காலங்களில் இருக்கை பிரச்னை, மழை நீர் ஒழுகல், வீல்சேர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களால் ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. மறுபுறம் குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளில் 100 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக தணிக்கையில் தெரியவந்தது.

air india

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானிகளின் ஓய்வுபெறும் வயது, 58இல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் விஸ்தாரா நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைந்ததன் மூலம், சமநிலையைக் கொண்டுவருவதற்காக விமானிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் சிஇஓ கேம்பெல் வில்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல், நிறுவனத்தில் பணியாற்றும் இதர ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது, 58இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் 3,600 விமானிகள் மற்றும் 9,500 கேபின் குழு உறுப்பினர்கள் உட்பட சுமார் 24,000 ஊழியர்கள் உள்ளனர். விமானிகளுக்கு இணையாக, கேபின் குழு உறுப்பினர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா கடந்த நவம்பர் மாதம் இணைந்தது. அதன் தொடர்ச்சியாக, ஏர் இந்தியா விமானிகளின் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானிகளிடையே வெவ்வேறு ஓய்வு வயது உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து அதிருப்தி இருந்தது. அந்தப் பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், வணிக விமானிகள் 65 வயது வரை பறக்க அனுமதிக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.

air india

டாடா' குழுமமும், 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனமும் இணைந்து, விஸ்தாரா பயணியர் விமானச் சேவை நிறுவனத்தை, கடந்த 10 ஆண்டுகளாக இயக்கி வந்தன. இந்த நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்திய பின், 'ஏஐஎக்ஸ் கனெக்ட்' பயணியர் விமானச் சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இணைத்துக் கொண்டது. அதன்பின்னர், 2024 நவம்பர் 12இல் டாடா குழுமத்தின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஏர் இந்தியாவில், விஸ்தாரா இணைந்ததும், அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சின் பங்கு 25.10 சதவீதமாக மாறியது. முன்னதாக, சிவிஸ்தாராவில் 49 சதவீத பங்குகளை வைத்திருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.