Air-India Flight Reuters
இந்தியா

எல்லாத்துக்கும் காரணம் விமானி? ஏர் இந்தியாவில் அதிர்ச்சி! 300 அடி கீழே சரிந்த விமானம்!

புக்கெட்டில் (தாய்லாந்து) இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானி தூக்கமின்மை பிரச்னைக்காக மருந்து எடுத்துக்கொண்டிருந்ததாக ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

ஒரு விமானி இயக்கும் விமானத்தின் உள்ளிருப்பது பலநூறு பயணிகளும் அவர்களின் வாழ்க்கையும் கனவுகளும் என்பதால் தான் அந்த வேலை மிகவும் பொறுப்புமிக்கதாக மதிக்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் ஒரு விமானியின் தவறுக்கு 145 விமானப் பயணிகளின் உயிர் பணயம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி புக்கெட்டில் (தாய்லாந்து) இருந்து டெல்லி சென்ற AI-2379 விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். ஒடிசா வான்பரப்பில் பறந்தபோது விமானம் திடீரென சுமார் 300 அடி உயரம் சரிந்தது. இதில் குறைந்தது 20 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் காயமடைந்தனர். பின்னர் விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இச்சம்பவத்தில், விமானத்தை இயக்கிய விமானி தூக்கமின்மை பிரச்னைக்காக மருந்து எடுத்துக்கொண்டிருந்ததாக ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, பிரபல செய்தி நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த விமானியிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் இரண்டு முறை கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. புக்கெட்டில் தங்கியிருந்தபோது எளிதில் தூக்கம் வரவில்லை என்றும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக நடைப்பயிற்சி போன்ற லேசான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Air-India Flight

தனிப்பட்ட காரணங்களால் சில காலமாக தூக்கமின்மை பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்காக குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உட்கொண்டதாகவும் விமானி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விமானப் பணிக்கான நேர அட்டவணை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஓய்வு நேரத்துக்குள் இருந்தாலும், பகல் நேர ஓய்வுக்கான நேரம் குறைவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். முதல் விமானத்துக்கு அதிகாலை 12.10 மணிக்கே பணிக்கு வர வேண்டியிருந்ததால், அதற்கு முன்பு போதுமான தூக்கம் பெறுவது கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடந்தபோது விமானி தனது இருக்கையில் இல்லை என்றும், துணை விமானியே விமானத்தை இயக்கிக் கொண்டிருந்ததாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்த பிறகு விமானி தடுமாறியதாகவும், அவருக்கு உதவி தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

air india

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரு விமானிகளும் பணிப் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.