ஏர் இந்திய விமானம்
ஏர் இந்திய விமானம் PT
இந்தியா

”யாராவது டாக்டர் இருக்கீங்களா?”- மயங்கிய பெண்ணின் உயிரை மீட்ட மருத்துவ பயணி! நடுவானில் நடந்த சம்பவம்

Jayashree A

நடுவானில் விமானத்தில் பயணித்த பயணியர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், அவரின் உயிரைக்காப்பாற்றிய மருத்துவ பயணி.

கடந்த வாரம் டெல்லியில் காலை 5.00 க்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா( I5-764) எஸ்க்பிரஸ் விமானம் ஒன்று புனே நோக்கி சென்றது. அதில் 9D என்ற இருக்கையில் புவனேஷ்வரில் பணிபுரியும் இருதயநோய் (cardiac anaesthesia) மருத்துவரான, டாக்கர் அசோக் குமாரும் பயணம் செய்துக்கொண்டிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் டெல்லியிலிருந்து கிளம்பிய விமானமானது நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தது.

திடீரன்று விமானத்தை சேர்ந்த கேபின் குழுவினர், அவசர அவசரமாக ஓடி வந்து, “பயணிகளில் யாராவது மருத்துவரோ அல்லது துணை மருத்துவரோ இருக்கிறீர்களா?” என்று பதற்றத்துடன் கேட்டதும், அசோக்குமார் எழுந்து , “நான் மருத்துவர்” என்று கூறியுள்ளார்.

அவரிடம் கேபின் குழுவினர், “டாக்டர் பயணி ஒருவர் மயக்கமுற்று டேபிளில் சரிந்துகிடக்கிறார். உங்களின் உதவி தேவை” என்றதும், சற்றும் தாமதிக்காமல் அசோக்குமார் அந்த நோயாளி அருகில் சென்றார்.

நோயாளி ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்றும், அவளின் இதயதுடிப்பு சீராக இல்லை என்றும் தெரிந்துக்கொண்ட மருத்துவர், அப்பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துக்கொண்டார். மருத்துவர் நோயாளிக்கு அவசரசிகிச்சையான CPR செய்யவேண்டியிருந்தது. ஆனால் அந்த குறுகிய இடத்தில் நோயாளிக்கு CPR சிகிச்சை செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை.

அதனால், அப்பெண்ணை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி விசாலமான ஒரு இடத்தில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று மருத்துவர் நினைத்தார். ஆகையால் பயணிகளின் உதவியுடன் மயக்கநிலையில் இருந்த அப்பெண்ணை தூக்கி விமானத்தின் இறக்கை பகுதியில் இருக்கும் சற்று விசாலமான பகுதிக்கு கொண்டுவந்தனர். அங்கு அப்பெண்ணிற்கு அவரச சிகிச்சையும், CPR சிகிச்சையையும் அளித்துள்ளார் மருத்துவர் அசோக்குமார்.

CPR சிகிச்சை

மருத்துவரின் தீவிர CPR சிகிச்சையின் முடிவில் அப்பெண் சிறிது சுயநினைவுக்கு வந்து அபாயகட்டத்தை தாண்டியிருக்கிறார். விமானம் புனேவில் இறங்கியதும் தயாராக இருந்த, ஆம்புலன்ஸின் உதவியுடன் உடனடியாக அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய ஏர் இந்தியா டெல்லி, புனே விமான பயணமானது மருத்துவருக்கும், நோயாளிக்கும் அதில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்திருக்கிறது.