இந்தியா

"போயிங் ரக விமானம் காங்கிரஸ் ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டது" - மத்திய அரசு

jagadeesh

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கி‌ய நபர்களின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள விமானம் காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆர்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் ‌ஆகியோரின் பயணங்களுக்கான அமெரிக்காவிடம் இருந்து ‌வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு போயிங் ரக விமானங்களில்‌ ஒன்று சென்ற வாரம் இந்தியா வந்தடைந்தது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்‌சாப் மாநிலத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விமானம் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் வீண் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், மிக மிக முக்கிய‌‌ நபர்களுக்கான விமானம் வாங்க கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக 2012ஆம் ஆண்டில் அப்போதிருந்த அமைச்சரவைக் குழு‌ 10 முறை கூட்டம் நடத்தி முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.