air india pt desk
இந்தியா

ஈரான் போர் | மே 31 வரை இஸ்ரேல் விமானச் சேவை நிறுத்தம்.. ஏர் இந்தியா அதிரடி!

மேற்கு ஆசிய மோதல் காரணமாக, ஏர் இந்தியா டெல் அவிவ் விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளது.

PT WEB

வளைகுடா பிராந்தியத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம் மற்றும் அமெரிக்கா–ஈரான் எச்சரிக்கைகள் காரணமாக, பாதுகாப்பு கவலைகளை முன்னிறுத்தி ஏர் இந்தியா புது டெல்லி–இஸ்ரேல் நேரடி விமானச் சேவையை நிறுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் போர் பதற்றம், சர்வதேச விமானச் சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - ஈரான் மாறிமாறி எச்சரிக்கைகளை விடுத்து வருவதால் போர் பதற்றம் அதிகமாகுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமானச் சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளதாகப் பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Tel Aviv Airport

இந்த முடிவு, விமான நிறுவனத்தின் புது டெல்லி - இஸ்ரேல் நேரடி சேவையைப் பாதிக்கிறது. இதனால், இந்தச் சேவை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படும். வளைகுடா நாடுகளில் நிலவும் நிலையற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தியா - இஸ்ரேல் இடையே நேரடிப் போக்குவரத்துத் தடைபட்டதால், பல பயணிகள் தற்போது ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற அண்டை நாடுகள் வழியாக மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

US Air Force tanker aircrafts in Tel Aviv airport

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், பல சர்வதேச விமான நிறுவனங்களும் இஸ்ரேலுக்கான விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு பரந்த போக்கின் அங்கமாகும். தி பயோனியர் பத்திரிகையின்படி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில இஸ்ரேலிய விமான நிறுவனங்களின் சேவைகள் மட்டுமே கடுமையான நிபந்தனைகளின் கீழ் தொடர்ந்து இயங்கி வருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-ல் இருக்கும் இந்திய தூதரகம் இந்திய மக்களுக்கு உதவி செய்து வருகிறது.