குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், கடந்த வாரம் விமானம் குறித்த அசெளகர்ய தகவல்கள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த சில நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மறுபுறம், ஏர் இந்தியா விமானங்கள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து நேற்று மும்பைக்கு வந்த ஏர் இந்தியா (AI 130) விமானத்தில் ஆறு கேபின் பணியாளர்கள் உட்பட 11 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் நோய்வாய்ப்பட்டனர். இந்த சம்பவத்தை விமான நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. பின்னர், விமானம் மும்பையில் தரையிறங்கிய பிறகும் இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான ஊழியர்கள் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதற்கு, food poisonதான் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.