இந்தியா

“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..!

webteam

ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் நிறுவனங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’  பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். 

அதில், “இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை போக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகளால் சில துறைகள் மந்தநிலையிலிருந்து மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி வருகின்றன. அத்துடன் தொழிற்துறை முதலீடுகளும் தற்போது மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் நாங்கள் நஷ்டத்திலிருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்(பிபிசிஎல்) ஆகிய இரண்டையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்க முடிவு எடுத்துள்ளோம். அதற்கான வேலைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் வரும் மார்ச்சிற்குள் இந்த நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விற்கப்படும். இது அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் ஒன்றாக உள்ளது. அதேசமயம் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் ஜிஎஸ்டி வருமானமும் விரைவில் சரியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.