model image meta ai
இந்தியா

சாலை விபத்துகளுக்கு முதன்மையான காரணம்.. எய்ம்ஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தூக்கமின்மை மற்றும் தூக்கம் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளே முதன்மையான காரணமாக அமைவதாக அண்மையில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

PT WEB

சாலை விபத்துகள் தொடர்பாக உத்தராகண்ட மாநிலம் ரிஷிகேஷ் நகரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உளவியல் துறை சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை நடந்த விபத்துகளில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்ற சுமார் 1,200 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இவற்றில் 21% விபத்துகள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஓட்டுநர்கள் தூங்கியதால் ஏற்பட்டவை. அதாவது இந்த விபத்துகள் ஓட்டுநர் தூங்கியதுடன் நேரடியாகத் தொடர்புடையவை. பிற விபத்துகளிலும் ஓட்டுநரின் போதிய தூக்கமின்மை சார்ந்த பிரச்சினைகளுக்குப் பங்குள்ளது. உதாரணமாக 26% விபத்துகளுக்கு அதிகப்படியான வேலையால் ஏற்படும் சோர்வு காரணம் என்று கண்டறியப்பட்டது.

model image

32% விபத்துக்களில் ஓட்டுநர் மது அருந்தியிருந்தது முக்கிய காரணியாக இருந்தாலும், இவர்களில் பலருக்கு ஏற்கெனவே தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் இருந்ததாகவும், மது அருந்துவது நிலையை மோசமாக்கியதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, தூக்கம் தொடர்பான விபத்துகளில் 68% நேர் சாலைகளில் நடந்துள்ளன. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இவை அதிகம் நிகழ்ந்துள்ளன.

இது உத்தராகண்ட் மாநிலத்துக்கானது மட்டுமல்ல. சாலை விபத்துகளும் விபத்து மரணங்களும் நாடு முழுவதும அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டுநர்களின் தூக்கமின்மை பிரச்சினைக்கு நாடு தழுவிய அளவில் முகம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த ஆண்டு மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தரவுகளின்படி இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு 78 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இதில் 60 விழுக்காடு 18 முதல் 34 வயதுக்குள் உள்ள இளைஞர்கள். 2022ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சாலை விபத்து மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன.

model image

தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரள மாநிலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன. தமிழ்நாடு 64,105 விபத்துகளுடன் சாலை விபத்து எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. 18347 பேர் உயிரிழப்புகளுடன் சாலை விபத்து மரணங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 23,652 மரணங்களுடன் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. மருத்துவ வல்லுநர்கள், ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்முறையின்போது தூக்கக் கோளாறுகளைக் கண்டறிவதற்கான சோதனைகளை கட்டாயமாக்க வலியுறுத்துகின்றனர். வாகன ஓட்டுநர்களை சீரான இடைவெளியில் உடல்நல சோதனைக்கு உட்படுத்தவும் பரிந்துரைக்கின்றனர். தூங்கிவழியும் ஓட்டுநர்களை எச்சரிக்கும் விதமாக வாகனங்களுக்குள் சென்சார் கருவிகளைப் பொருத்துமாறும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஓட்டுநர்கள் சோர்வாக உணர்ந்தால், வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.