இந்தியா

”கல்வியைபோல வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீடு தேவை” - ஜிப்மர் முன்பு அதிமுக ஆர்ப்பாட்டம்!

webteam

ஜிப்மர் மருத்துவமனை வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்தவர்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், ஜிப்மர் மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையான ஜிப்மர் நிர்வாகம், செவிலியர் பணி தேர்வுக்கான அகில இந்திய அளவில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 450 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அகில இந்திய அளவில் தேர்வு நடைபெற உள்ளது.

அகில இந்திய அளவில் இந்த தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில், கல்வியில் புதுச்சேரி மாணவர்களுக்கு 26.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போல, வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜிப்மர் நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி அதிமுக சார்பில் ஜிப்மர் வளாகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.