மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த பிஜே குரியன் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவிக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளரை இன்னும் யாரும் அறிவிக்கவில்லை. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு அதிமுகவின் மைத்ரேயன் போட்டியிட முயற்சி செய்ததாகவும் ஆனால் பாஜக சார்பில் தங்களது கூட்டணி வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக கூறியதால் அவர் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த எம்பி ஒருவரை மாநிலங்களவை துணைத்தலைவர் வேட்பாளராக தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிமுக எம்பிக்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய எம்பிக்கள் கட்சி தலைமையின் ஆலோசனைப்படி பாஜக தலைமையிலான வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.