பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ள நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் எரிப்பு சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பத்மாவத் திரைப்படத்திற்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குஜராத்தில் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் வாகனங்களை தீவைத்து கொளுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
சர்ச்சைகளை தாண்டி நாளை பத்மாவத் திரைக்கு வர உள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அப்படத்திற்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. வணிக வளாம் ஒன்றில் பத்மாவத் திரையிடப்படயிருப்பதை அறிந்த இந்து அமைப்பினர் அங்கு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாகனங்கள், கடைகளை அடித்து நொறுக்கி அவர்கள் வன்முறையில் இறங்கியதால் பதற்றம் நிலவியது.
50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வணிக மேலாளர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் பத்மாவத் படத்தை திரையிடவதில்லை என ஏற்கனவே முடிவு செய்துள்ளோம், ஆனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 25 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வன்முறையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். வன்முறையை காவல்துறையினர் கட்டுக்குள்கொண்டுவந்துள்ள நிலையில், வணிகவளாகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.