குஜராத் மாநில மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அகமது படேல் வெற்றிக்குத் தேவையான 44 வாக்குகளைப் பெற்றார்.
இது கட்சிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாய்மையே வென்றதாக ட்விட்டரில் அகமது படேல் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பல்வந்த் சிங் தோல்வியைத் தழுவினார். முன்னதாக, குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத்தில் இருந்து 3 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யத் தேர்தல் நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிட்டார். இந்த தேர்தலில், குஜராத்தின் 176 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், வாக்களித்த இரண்டு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாங்கள் வாக்களித்ததை, பாஜகவினரிடம் காண்பித்தனர். இதனையடுத்து, அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரின் வாக்குகளை நிராகரிக்க காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்த நிலையில், காங்கிரஸ் புகார் அளித்ததை அடுத்து வாக்கு எண்ணும் பணி தாமதமானது. இந்நிலையில், இரவு 11.30 மணியளவில் உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையம், ரகசிய வாக்கெடுப்பு முறையை மீறி 2 எம்எல்ஏக்களும் செயல்பட்டதாக கூறியது. இதனால், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2பேரின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதால், பாரதிய ஜனதா கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அகமது படேல் வெற்றிக்குத் தேவையான 44 வாக்குகளைப் பெற்றார்.