மக்களவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாரதிய ஜனதா எம்பிக்களின் எண்ணிக்கையை இன்னும் ஏன் குறைக்கப்படவில்லை என மக்களவை செயலகத்திடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கோரியுள்ளது.
மக்களவை செயலகத்திடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் விளக்கம் ஒன்றை கோரியுள்ளார். அதில் எடியூரப்பா, ஸ்ரீராமுலு இருவரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவை உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அகமது பட்டேல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் மக்களவையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் எடியூரப்பா, ஸ்ரீராமுலுவின் தொகுதிகள் காலியாக இருப்பது குறிப்பிடப்படவில்லை எனவும், இது தொடர்பாக விளக்கம் தேவை என்றும் அகமது பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை வலைத்தள தகவலின்படி பாரதிய ஜனதாவுக்கு தற்போது 274 எம்பிக்கள் உள்ளனர். எடியூரப்பாவையும் ஸ்ரீராமுலுவையும் கழித்துக்கொண்டால் பாஜக எண்ணிக்கை 272 ஆக குறையும். இதுவே மக்களவையில் தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கையும் ஆகும்.