மக்களவை தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதியை எதிர்ப்பார்த்து இந்தியாவில் அனைத்து கட்சிகளும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றன. தமிழகத்தில் பெரும்பாலும் கூட்டணி கட்சிகள் குறித்து முடிவு செய்து விட்டன. தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நிலுவையில் இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளான பாஜக அதிமுகவுடனும் காங்கிரஸ் திமுகவுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
தேர்தல் தேதி கடந்த முறை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டதால் இந்த முறையும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை வெளியிடவில்லை.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் தேதியை அறிவிக்க, பிரதமரின் ‘அரசுப் பயண திட்டங்கள்’ முடியும் வரை தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா? அரசு நிகழ்ச்சிகளை காரணம் காட்டி, அரசியல் பொதுக் கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். டி.வி, ரேடியோ, செய்தி தாள்கள் என ஊடகங்களில் அரசு விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இறுதி வரை அரசு பணத்தை பயன்படுத்தி மத்திய அரசு பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் நீண்ட வாய்ப்பு அளிப்பது போல் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.