பாகிஸ்தான் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள விங் கமாண்டர் அபிநந்தனுக்கு அகிம்சா என்ற விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவுக்குள் கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவ முயன்றன. அதை இந்திய விமானப் படை விமானங்கள் விரட்டி அடித்தன. அப்போது அவர்களின் எப் 16 ரக ஜெட் விமானம், விங் காமெண்டர் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்ற அபிநந்தனின் மிக்-21 விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் விழுந்தது. அப்போது, பாதுகாப்பாக கீழே குதித்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். பின்னர் பாகிஸ்தான் மூன்று நாட்களுக்குப் பிறகு நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுவித்தது.
இதனையடுத்து தேசமே கொண்டாடும் ஹீரோவாகிவிட்டார் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன். அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த போது, முகத்தில் சிறிய பயம் இல்லாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது.
இந்தியா திரும்பிய அவரை நாடே வரவேற்றது. தாயகம் திரும்பிய அவருக்கு அகில பாரதிய திகம்பர் ஜெய்ன் மஹா சமிதி என்ற அமைப்பு, பகவான் மஹாவீர் அகிம்சா என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி அன்று அந்த விருது அபிநந்தனுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.