இந்தியா

பிளஸ்டூ படித்த மாணவிகளுக்கு 25ஆயிரம் நிதியுதவி: தேர்தல் முன்னோட்டமாக அறிவித்த நிதிஷ்குமார்

பிளஸ்டூ படித்த மாணவிகளுக்கு 25ஆயிரம் நிதியுதவி: தேர்தல் முன்னோட்டமாக அறிவித்த நிதிஷ்குமார்

Veeramani

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25,000  வழங்கப்படும் என்றும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு  ரூ.50,000  நிதியுதவி வழங்கப்படும் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ .25 ஆயிரமும், பட்டம் பெறும் மாணவிகளுக்கு ரூ .50,000 வழங்குவதாக  பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்  நேற்று அறிவித்தார். மேலும் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்தும் 'யுவ சக்தி, பீகார் கி பிரகதி' என்ற திட்டத்தை எடுத்துரைத்த அவர், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய துறையை உருவாக்குவோம். ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்கள் இதன் கீழ் வரும். தங்கள் முயற்சியைத் தொடங்க விரும்பும் மக்களுக்கு அரசு நிதி உதவி செய்யும் என்றார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம்  அறிவித்ததை வரவேற்ற அவர் , கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியிலும் பீகார் தேர்தலின் போது மக்கள் வாக்களிக்க வெளியே வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .

பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “முதல் கட்ட தேர்தல்கள் அக்டோபர் 28 அன்று 71 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும், 94 இடங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல்கள் நவம்பர் 3 ம் தேதியும், 78 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7 ம் தேதியும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.