Uttar pradesh news PT
இந்தியா

உ.பி பெண்ணுக்கு 2 வருடங்களில் 25 குழந்தைகள்; 5 முறை கருத்தடை அறுவை சிகிச்சை! ”அதெப்படி திமிங்கலம்”?

2 வருடங்களில் 25 குழந்தைகள்... ஐந்து முறை கருத்தடை அறுவை சிகிச்சை! அதெப்படி? என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், ஆனால், 5 முறை கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு ஆவணங்களில் பதிவாகியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி தகவல் என்ன பார்க்கலாம்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஒரு சுகாதார மையத்தின் பதிவேட்டில் நாக்லா கடம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 25 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், ஆனால், அவருக்கு ஐந்து முறை கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் பதிவாகியுள்ளது . எந்த வகையிலும் சாத்தியமே இல்லாத இந்த தகவல்கள் அதிகாரிகளுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்த இதன் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் இதில் நடைப்பெற்ற மோசடிகள் அம்பலமானது.

தாய்மைப்பேறு அடையும் பெண்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அளிக்கும் உதவித் தொகையை பெறுவதற்காக இந்த மோசடி அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணா என்ற ஒரே பெண்ணின் பெயரை பலமுறை பயன்படுத்தி, வங்கி கணக்கு உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்து 45 ஆயிரம் பணத்தையும் பெற்றுள்ளனர் மோசடியில் ஈடுபட்டவர்கள். அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவெனில், தன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைப்பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட பெண்ணே அறியவில்லை என்பதுதான்.

மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கௌரவ் தாபா , நீரஜ் அவஸ்தி, கௌதம் சிங், அசார் அகமது ஆகியோர் போலி தரவுகளை பதிவு செய்ய, போலியான வங்கி கணக்கைத் திறக்க அசோக் குமார் என்பவர் உதவியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும், மருத்துவர்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்று அதிகரிகள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் 4 பேர் உட்பட அந்த பெண் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளநிலையில், நான்கு சுகாதார ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. போலியாண ஆவணங்களை பயன்படுத்தி, அரசாங்க திட்டங்களை இப்படி தவறாக பயன்படுத்துவதும் இதுபோன்ற சம்பவங்கள் கடுமையான கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.