கேரள மாநிலம் இடுக்கி அணையின் மேலும் இரு மதகுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே தொடர்மழையால் மாநிலத்தின் பல அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. அணையின் ஒரு மதகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக இன்று மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2403 அடி கொண்ட இடுக்கி அணையில் தற்போது 2400.94 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.