இந்தியா

மேலும் இரண்டு கர்நாடக காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா

Rasus

கர்நாடகாவில் காங்கிரஸை சேர்ந்த மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அமைச்சரான நாகராஜும், ஜிக்மள்ளாபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சுதாகரும், இன்று சட்டப்பேரவைக்கு சென்று தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் நாகராஜ் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், தனியாக இருந்த அதிருப்தி எம்எல்ஏ சுதாகரை,‌ காங்‌கிரஸ் எம்எல்ஏக்கள் சூழ்ந்துகொண்டு ராஜினாமாவை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு அவர் மறுக்கவே, அமைச்சர் ஜார்ஜ் இருக்கும் அறைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுள்ளனர். அதற்கும் அவர் ஒப்புக் கொள்ளாததால், சபாநாயகர் அறையில் இருந்த சுதாகரை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் ரகளை ஏற்பட்டது.‌

ஏற்கெனவே ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி எம்எல்ஏக்கள் 13 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துவிட்டு மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.