Diljit Dosanjh, amitabh bachchan x page
இந்தியா

அமிதாப் கால்களைத் தொட்டு வணங்கிய பஞ்சாப் பாடகர்.. வைரல் பதிவு.. பச்சனுக்கும் அச்சுறுத்தல்?

பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ், அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கியதற்குப் பிறகு, பச்சனுக்கும் அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியிருப்பதாக மத்திய அமைப்புகள் மதிப்பீடு செய்து வருகின்றன.

Prakash J

பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ், அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கியதற்குப் பிறகு, பச்சனுக்கும் அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியிருப்பதாக மத்திய அமைப்புகள் மதிப்பீடு செய்து வருகின்றன

பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜை, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மரியாதை நிமித்தமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கினார். இந்தச் செயல், 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை அவமதித்து இருப்பதாக காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,1984 சீக்கியப் படுகொலையின்போது, ’ரத்தத்திற்கு ரத்தம்’ எனக் கூறி வன்முறையாளர்களை அமிதாப் பச்சன் தூண்டியதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், நவம்பர் 1ஆம் நாள் சீக்கிய இனப் படுகொலை நாளில், ஆஸ்திரேலியாவில் தில்ஜித் தோசாஞ்ச் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கும் எஸ்.எஃப்.ஜே அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில், அன்பைப் பரப்புவது குறித்து தில்ஜித் இன்ஸ்டாகிராமில் ஒரு இதயப்பூர்வமான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த தனது இசை நிகழ்ச்சியின் வீடியோவை தில்ஜித் பகிர்ந்து கொண்டார், அங்கு அவர் ஆற்றிய உரையில், “நான் எப்போதும் அன்பைப் பற்றிப் பேசுவேன். எனக்கு, இந்த பூமி ஒன்று. என் குரு, 'இக் ஓங்கர்'. நான் இந்த பூமியிலிருந்து பிறந்தேன், இந்த மண்ணிலிருந்து என் உயிரைப் பெற்றேன், ஒருநாள் நான் இந்த மண்ணுக்குத் திரும்புவேன். எனவே, அனைவருக்கும் என் தரப்பில் இருந்து அன்பு மட்டுமே உள்ளது, யாராவது என்னைப் பார்த்து பொறாமைப்பட்டாலும் அல்லது என்னை ட்ரோல் செய்தாலும்கூட, நான் எப்போதும் அன்பின் செய்தியை மட்டுமே பரப்புவேன்.

நான் எப்போதும் அப்படித்தான் செய்து வருகிறேன். யாரும் அதைப் பற்றி எப்படி உணர்ந்தாலும் எனக்கு கவலையில்லை. பலர், 'நாங்கள் வெளிப்பட்டோம், கடவுள் நமக்கு இதைக் கொடுத்தார்' என்று கூறுகிறார்கள். அவர்கள் விரும்புவதைப் பெறுகிறார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏன் இவ்வளவு வெளிப்பட வேண்டும்? ஒரு நபர், தான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் பற்றி தங்கள் இதயத்தில் சிந்திக்க வேண்டும். சிந்திக்க மட்டுமே வேண்டும். கடவுள் அதைச் செய்வார். அதை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது ஆரா சுற்றுப்பயணத்திற்காக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தோஜன்ஜ், மெல்போர்ன் (நவம்பர் 1), அடிலெய்டு (நவம்பர் 5), பெர்த் (நவம்பர் 9), ஆக்லாந்து (நவம்பர் 13) ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியபோது இனவெறி கருத்துகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன்

இன்னொரு புறம், தில்ஜித் தோசன்ஜ் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கியதற்குப் பிறகு, பச்சனுக்கும் அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியிருப்பதாக மத்திய அமைப்புகள் மதிப்பீடு செய்து வருகின்றன. தில்ஜித் தோசன்ஜுடனான அவரது சமீபத்திய கேபிசியுடன் இது தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.