இந்தியா

ஆதாரின் நம்பகத்தன்மையை நீருபிக்க பதிவிட்டேன் - ட்ராய் தலைவர் விளக்கம்

webteam

ஆதார் தொடர்பான தவறான தகவல்கள் குறித்த அச்சத்தை நீக்கும் வகையில் தான் தனது ஆதார் எண்ணை பதிவிட்டதாக ட்ராய் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என்று அதை ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார். இதன்மூலம் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா எனவும் சவால் விட்டார். ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றை பதிவிட்டார். செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டார். எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ளார். ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷர்மா, தான் எதையும் நிரூபிக்க முயற்சிக்கவில்லை என கூறியுள்ளார். தான் தனது 12 இலக்க ஆதாரை என்னை பகிர்ந்து, அதன் பாதுகாப்பை நீருபிக்க நினைத்ததாகவும், அதன்மூலம் தனக்கு எந்த வகையிலும் தன்னை அச்சுறுத்தாது எனக்காட்டவே பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆதார் தொடர்பான தவறான தகவல்களின் அச்சத்தை நீக்கவே தான் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.