இந்தியா

சோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்

சோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்

webteam

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். இருப்பினும் தாங்கள் இழந்தவற்றை மீட்டெடுக்க முடியாமல் கேரள மக்கள் தவித்து வருகின்றனர். பலரும் தங்கள் வீடுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சத்தமின்றி ஒரு இன மக்களின் வாழ்விடம் இந்த வெள்ளத்தால் பறிபோயுள்ளது. 

கேரளத்தின் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தான் சோழநாய்க்கர் இன மக்கள். தெற்கு வயநாட்டின் மெப்படி மலையடிவாரத்தின் கீழ் இந்த இனத்தை சேர்ந்த 12 குடும்பங்கள் வசித்து வந்தனர். 12 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் என 42 பேர் 12 குடும்பங்களாக அங்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் அங்கு தேன் எடுத்தல், கிழங்குகள் பறித்தல் ஆகிய தொழில் செய்து வந்தனர். அந்த தேனை நகர்புறத்தில் விற்று வாழ்தாரத்தை ஈட்டி வந்தனர். பசுமையான சூழலில் மகிழ்ச்சி பஞ்சமில்லதா இவர்களின் வாழ்வை, அண்மையில் வந்த வெள்ள புரட்டிப்போட்டுள்ளது. மழையில் வெள்ளம் ஏற்பட்டபோது, இவர்கள் அண்மையில் இருந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ளத்திற்குப் பிறகு இவர்கள் வாழ்விடத்தில் சென்று பார்த்தால், அங்கு அந்த இடம் இருந்ததற்கான சுவடே இல்லாத வகையில் உருக்குலைந்துவிட்டது. 

இதனால் இவர்கள் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இவர்கள் வசிப்பதற்கு வட்டாத்துவயல் பகுதியில் இடம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த 13 குழந்தைகளையும் இந்த வருடம் முதல் பள்ளிக்கு அனுப்பவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தாங்கள் வாழ்ந்த இடம்போல், எந்த இடமும் வராது என சோழநாய்க்கர் இன மக்கள் கூறியுள்ளனர்.