காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மற்றும் விமானப்படை தளம் அருகே எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் நிர்மல் சிங் தெரிவித்துள்ளார். அதேபோல், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படை வளாகத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சிங் கூறியிருக்கிறார். இதனிடையே, பயங்கரவாதிகளின் தாக்குதல் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள பெருநகர விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு அசம்பாவிதத்தையும் முறியடிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படி விமானநிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.