போபால் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் 3 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் அரசுக்கு சொந்தமான ஹமீடியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு தனி வார்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென்று மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் மின்சார ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நீடித்த மின்வெட்டால் கொரோனா வார்டில் வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சைப் பெற்றுவந்த 3 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த மூன்று நோயாளிகளில் ஒருவரான அக்பர் கான், இரண்டு முறை காங்கிரஸ் கவுன்சிலராக பதவி வகித்தவர்.
இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருந்த பொதுப்பணித்துறை துணை பொறியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையின் டீனுக்கு நோட்டீஸ் அனுப்பி மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் மின்சாரம் செயலிழந்ததால் யாரும் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ இது ஒரு மோசமான குறைபாடு. ஜெனரேட்டரை இயக்குவதற்கான பட்ஜெட் முழுமையாக ஒதுக்கப்பட்டது. ஜெனரேட்டரை இயக்க தேவையான டீசல் மற்றும் பிற உபகரணங்களும் கிடைத்தன. மின்வெட்டுக்குப் பிறகு, ஜெனரேட்டர் சுமார் 10 நிமிடங்கள் வேலை செய்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிறுத்தப்பட்டது. தடைபட்ட மின்சாரம் ஒரு மணி நேரத்திற்குள் மீட்டெடுக்கப்பட்டது.
ஜெனரேட்டர் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது. முதல்வர் அறிக்கை கேட்டு தவறிழைத்தவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மின்வெட்டால் யாரும் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர்களுக்கு பவர் பேக்கப் இருந்தது. அது மூன்று அடுக்கு பாதுகாப்பு அம்சம் உடையது’’ எனக் கூறினார்.