இந்தியா

சபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் !

சபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் !

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல தனது குழுவினருடன் நேற்று காலை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு வந்த பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், கடும் எதிர்ப்பின் காரணமாக மீண்டும் புனேவுக்கே திரும்பிச் சென்றார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, பெண் சமூக செயற்பாட்டாளர்கள் பலர், ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினரின் போராட்டத்தால், அவர்களது முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

குறிப்பாக, கடந்த ஆண்டு சபரிமலை செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, பல மணி நேரங்களுக்குப் பின் புனேவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டும் சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்திறங்கிய திருப்தி தேசாய், அங்கிருந்து நேராக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று, தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், காவல்துறையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டனர்.

அதே சமயம், திருப்தி தேசாயின் வருகையை அறிந்து அங்கு குவிந்த ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும், சரண கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், இம்முறையும் திருப்தி தேசாயின் முயற்சி தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து புனே புறப்பட்டு சென்ற திருப்தி தேசாய், மீண்டும் சபரிமலைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அவருடன் வந்த பிந்து என்ற பெண் மீது காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஸ்ரீநாத் பத்மநாபன் என்பவர் மிளகு ஸ்ப்ரே அடித்தும், மிளகாய் பொடி தூவியும் தாக்குதல் நடத்தினார். இதில் காயமடைந்த பிந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், வீடு திரும்பினார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள அரசு, மிளகு ஸ்பிரே அடித்த நபரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்துள்ளது.

திருப்தி தேசாய் சபரிமலைக்கு வர முயன்றதன் பின்னணியில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி இருப்பதாக கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம்சாட்டினார். அமைதியான முறையில் தொடங்கி இருக்கும் மண்டல பூஜை வழிபாட்டை சீர்குலைத்து, இந்துக்கள் மத்தியில் மாநில அரசின் பெயரை கெடுப்பதற்காக பாஜகவே திருப்தி தேசாயை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.