மும்பையில் 14 பேரை பலிகொண்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து சட்டவிரோதமானக் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மும்பை நகரின் லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடிக் கட்டட வளாகத்தில் 28-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தில் உள்ள ரெஸ்டாரெண்ட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யாத ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரெஸ்டாரெண்ட்களின் கட்டடத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இயந்திரங்களின் உதவியுடன் இன்று காலை முதலே இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். மும்பை நகர் முழுவதும் உள்ள ரெஸ்டாரெண்ட்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.