திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நீண்ட வரிசையில் நின்று 83 நாள்களுக்கு பிறகு பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று சர்வ தரிசன டோக்கன் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று முதல் அனைத்து தரப்பு பக்தர்களும் சுவாமியை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தரிசனத்திற்கு முந்தைய நாள் திருப்பதியில் உள்ள 18 மையங்களில் ஏதாவது ஒரு மையத்தில் ஆதார் அட்டை மூலம் இலவச தரிசன டோக்கன் பெறலாம் என அறிவித்ததால், நேற்று அதிகாலை முதலே திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச் சென்றனர்.
முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 3 நாட்களாக தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகளுக்கு சோதனை அடிப்படையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அலிபிரி மலையடிவாரம் முதல் சுவாமி சன்னதி வரை அனைத்து இடங்களிலும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது.
மேலும் தனி மனித இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது. சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு தரிசனம் இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒருநாளைக்கு சுமார் 6,500 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.