போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்ற சந்திரேஷ் என்பவரின் மேல்முறையீட்டு மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மற்றும் பிரசாந்த் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வாழ்க்கையில் விரிசல் ஏற்படும்போது அது, அதிகளவில் ஆண்கள் மீது வன்புணர்வு புகாராக மாற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் அதிகரித்து வரும் மேற்கத்திய சிந்தனை முறை மற்றும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ’லிவ் இன்’ கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், அந்த உறவுகள் முறியும் போது, குற்றவியல் வழக்குகள் பதியப்படுவது அதிகரித்திருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
’லிவ் இன்’ உறவு தோல்விக்கு பிறகு, லிவ் இன் என்ற கருத்தாக்கமே இல்லாத காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டு ஆண்கள் அதிகளவில் தண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், தனது முழு விருப்பத்துடனேயே ஆறு மாதங்கள் சந்திரேஷ் என்பவருடன் வாழ்ந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது வயது குறித்த சான்றுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததும் நிரூபணமானது. இதையடுத்து, விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டித்துள்ளது.