கேரளாவை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்துக்கு தோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிவாரண நிதி அளித்துள்ளார்.
இந்த ஆண்டு பருவ மழை காரணமாக பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது தான் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து தற்போது வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பேரிடரால் மொத்த மக்கள் தொகையில் 13.19 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரதமர் மோடியும் நாகாலாந்து மழை, வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.
கேரளாவைப் போல் தங்களது மாநிலத்திற்கும் உதவிக்கரம் நீட்டுமாறு நாகாலாந்து முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார். ட்விட்டரில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து மாநிலத்திற்கு தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ரூ.1.25 கோடி நிதியை வழங்கியுள்ளார். முதலமைச்சர் நெப்யூ ரியோவை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை சுஷாந்த் சிங் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக சுஷாந்த் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அவர் ரூ1 கோடி நிவாரண நிதியாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.