ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநில அந்தஸ்து மூலம் அதிகாரம் பெறுவதுடன் தனித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் லடாக் பழங்குடிகள் விரும்புகின்றனர். மேலும் திரிபுரா உள்ளிட்ட 4 பழங்குடியின மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரசமைப்பு சாசனத்தின் 6ஆவது பிரிவு அந்தஸ்து தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்கின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அவருக்கு, கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) ஆதரவு அளித்தது. இதற்கிடையே, சில தரப்பினர் வன்முறையில் இறங்கினர். லே நகரில் கடுமையான மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து வாங்சுக்கின் பதினைந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அப்போது போராட்டம் நடத்தியவர்கள் அங்குள்ள பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்தனர். ஹில் கவுன்சில் தலைமையகத்தையும் சேதப்படுத்தினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என மாறிமாறி நடந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடுப்பு நடவடிக்கையாக குறைந்தது 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
வன்முறையைத் தொடா்ந்து லே மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு தற்போதும் அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை மீறும் எந்தவொரு பொது அறிக்கை, பேச்சு அல்லது அறிவிப்பை வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கின் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது. இதை மறுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், ”காங்கிரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோனம் வாங்சுக் பல மாதங்களாக மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.. லடாக்கில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு மத்திய அரசே பொறுப்பு" எனத் தெரிவித்தார். அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவும் மத்திய அரசைச் சாடியுள்ளார். அவர், “லடாக்கியர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது அவர்களை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துவது அருவருப்பானது" எனப் பதிவிட்டுள்ளார்.