மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணமான நிலையில் இருவரும் மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவுக்குச் சென்றனர். அங்கு இருவரும் திடீரென காணாமல் போயினர். சில நாட்கள் கழித்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மலைப் பள்ளத்தாக்கில் புதருக்குள் கடந்த ஜூன் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதன்பின் சில நாட்கள் கழித்து மனைவி சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார். இவரைத் தவிர, மேலும் மூவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில்தான், இறந்த ராஜாவின் மனைவி சோனமுக்கு வேறு ஒரு நபருடன் காதல் இருந்ததாகவும் இதற்கு இடையூறாக இருந்த தனது கணவரை சோனம் கூலிப்படைகளை விட்டு கொன்றதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், இதன் தொடர்ச்சியாக மேகாலயா அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது.
மே 23 அன்று, இறந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகிய இருவரும் ஒரு தங்குமிடத்திலிருந்து வெளியே வந்த பிறகு, இருவரும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் வாடகைக்கு எடுத்த வாகனம் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த ஸ்கூட்டர் முறைப்படி பதிவு செய்யப்படாத ஒரு வாகனம் எனத் தெரியவந்தது.
இந்தக் கொடூரமான கொலைக்குப் பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மேகாலயா குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் (MRSSA), 2016 ஐ அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக சுற்றுலா அமைச்சர் பால் லிங்டோ தெரிவித்தார். இந்நிலையில், வணிக நோக்கங்களுக்காக தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கு தடை விதித்து அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜூன் 13,2025 அன்று மேகாலயாவின் போக்குவரத்து ஆணையர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் முக்கிய பிரிவுகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரிவு 66 இன்படி,வாகனங்களை இயக்க முறையான அனுமதியும்,
பிரிவு 192A வாகனங்களை வணிக நோக்கத்திற்காக தகுந்த அனுமதியின்றி உபயோகித்தால் அதற்கு அபராதம் விதிக்க அனுமதியும்
விதிமீறல்களில் ஈடுபட்டால், வாகன பறிமுதல் மற்றும் சிறைதண்டனை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை விதிக்க பிரிவு 207 அதிகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.