பாலியல் வன்கொடுமை பற்றி கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமார் பேசியது சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (வியாழக்கிழமை) விவசாயிகள் பிரச்னை எழுப்பப்பட்டது. விவசாயிகள் பிரச்னை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, "அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். எனது அக்கறை எல்லாம் அவை தடைபடாமல் அலுவல் நடக்க வேண்டும் என்பதே" என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ரமேஷ் குமார், வன்கொடுமை தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, நன்றாக சாய்ந்து படுத்து நீங்களும் அனுபவியுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான் என்று சிரித்துக்கொண்டே சபாநாயகரிடம் கூறினார். அவரது பேச்சால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கேட்டனர்.
இந்நிலையில் தனது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இது குறித்து எம்எல்ஏ கேஆர் ரமேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். நேற்றிரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பேச்சுவாக்கில் தான் அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர கொடுங்குற்றமான பாலியல் வன்கொடுமையை அங்கீகரிக்கவில்லை. இனி அவையில் எனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்வு செய்வேன்" என்று கூறினார். ரமேஷ் குமாரும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.