இந்தியா

வேலையைவிட்டு தூக்கிடலாமா? - இந்து அல்லாத ஊழியர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ்

வேலையைவிட்டு தூக்கிடலாமா? - இந்து அல்லாத ஊழியர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ்

rajakannan

திருமலா திருப்பதி தேவஸ்தானம் தங்களது ட்ரஸ்டில் வேலை பார்க்கும் இந்து அல்லாத ஊழியர்கள் 44 பேருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இந்து அல்லாதோர் என்பதால் உங்களை ஏன் வேலையில் இருந்து நீக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தது. நோட்டீஸ் குறித்து பதிலளிக்க 3 வாரம் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், சரியாக விளக்கம் கொடுக்க வில்லை என்றால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று எச்சரித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேவஸ்தான பணியாளர் ஒருவர் தேவஸ்தானுக்கு சொந்தமான காரில் சர்ச்சுக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 

அந்த நோட்டீஸில், “உங்களுடைய சர்வீஸ் ஆவணங்களை சரிபார்த்ததில் நீங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தேவஸ்தான விதிமுறைகளுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உங்களுடைய நியமனம் ஏற்புடையது அல்ல. உங்களுடைய நியமனம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நோட்டீஸ் பெறப்பட்ட ஒருவர் கூறுகையில், “என்னுடைய பெயர் தவறுதலாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தேவஸ்தானத்தில் பல ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். நான் இந்து என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. என்னுடைய திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. என்னுடைய குடும்பத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து முறைப்படி நடைபெற்று வருகிறது” என்றார்.