கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பெரியார் அருகே கடந்த இரண்டு நாட்களாக முடங்கிய போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கன மழையால் வண்டிப்பெரியார் அருகே கக்கிக்கவலை என்னும் இடத்தில் நெடுஞ்சாலை உள்ள பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. கேரளாவின் முக்கிய நகரங்களை மட்டுமல்லாமல், தமிழக கேரள எல்லையை இணைக்கும் இந்த பிரதான தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் வடியாததால் இரண்டு நாட்களாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால் இரண்டரை மணி நேரம் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உருவானது. இதனால் சபரிமலை பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு, தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவிற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள், கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டு வந்தன. தற்போது மழை குறைந்து மழை நீர் படிப்படியாக வடிய ஆரம்பித்துள்ளதால் இரண்டு நாள் முடங்கிய போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்க ஆரம்பித்துள்ளன. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.