இந்தியா

ஆப்பிரிக்க ஸ்வைன் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் மிசோரமில் இறப்பு

Sinekadhara

மிசோரத்திலுள்ள கிராமம் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் ஆப்பிரிக்க ஸ்வைன் காய்ச்சலால் இறந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மிசோரம் மாநிலத்தின் லுங்லேய் மாவட்டத்திலுள்ள லுங்க்சன் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு இயக்குநர் இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அந்த கிராமத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட பன்றிகளை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் ஹ்மர்குங்கா கூறுகையில், ‘’தற்போது ஒரு கிராமத்தில் மட்டும்தான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்’’ என்று கூறினார்.

மேலும் லுங்கேய் மியான்மருக்கு அருகில் இருப்பதால் தொற்று எங்கிருந்து பரவியது என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாகவும் அவர் கூறினார். பாதிப்புக்குள்ளான பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த வருடம் அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் ஆயிரக்கணக்கான பன்றிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.