கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்க்கொண்டது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியாவின் திடீர் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் சிந்து நதி நீர், நிறுத்தப்பட்டதை போர் நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்று அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப்.
இந்த நிலையில் தான், இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தை தடுக்க குறுக்கே புதிய அணையை கட்டும் முயற்சியில் ஆப்கன் அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பலூச் ஆதரவாளர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், தலிபான் அரசின் ராணுவ ஜெனரல் முகமது முபின்கான், குனார் பகுதியில் உள்ள அணையை நேரில் ஆய்வு செய்ததாகவும், புதிய அணையை கட்ட நிதி திரட்டும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுடன் முகமது முபின்கான் பேசும் காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.
அந்த காணொளியில் முபின்கான் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன." இந்த நீர் எங்கள் ரத்தம்.நரம்புகளில் இருந்து ரத்தத்தை வெளியேற அனுமதிக்க முடியாது என்றும்,எங்கள் மின்சார தேவையை பூர்த்திசெய்து கொள்ள இந்த நீர் அவசியம் எனவும்" அவர் பேசியுள்ளார்.
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே இருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் போல ஆப்கானிஸ்தானுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ ஜெனரல் முகமது முபின்கான் ஆய்வு செய்ததை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.