இந்தியா

புதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ல் ஆலோசனை

webteam

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது கருத்துக் கூற மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த உள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை புதிய தேசியக் கொள்கை வரைவின் மீது ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கருத்து தெரிவிக்க முன்‌னதாக ஜூன் 1 முதல் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி இருந்தது. சுமார் 500 பக்கங்கள் கொண்டிருந்ததால் வரைவு குறித்து கருத்து தெரிவிக்க ஒரு மாத காலம் போதாதது என பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜூலை 31ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தது. புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள ‌மேலும் அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து ‌புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த உள்ளது.