இந்தியா

திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவு கிரிமினல் குற்றமல்ல... உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவு கிரிமினல் குற்றமல்ல... உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Rasus

திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாதப் பட்சத்தில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணமான பெண்ணும், திருமணமான வேறொரு ஆணும் பாலியல் உறவு வைத்திருந்தால், ஆணை மட்டுமே தண்டிக்க சட்டப்பிரிவு 497 வழி செய்கிறது. இந்தச் சட்டத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணையின் போது இந்த சட்டப்பிரிவு பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடை கொண்டிருப்பது போல் தோற்றமளித்தாலும், ஆணாதிக்க நிலைக்கே வழி வகுப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாதப் பட்சத்தில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல்சாசனத்திற்கு விரோதமானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும் என கூறியுள்ளது.

இதுவரை திருமணமான பெண்ணுடன் அவரின் கணவரின் சம்மதமின்றி மற்றொரு திருமணமான ஆண் உறவு வைத்துக் கொண்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு அந்த ஆணுக்கு சட்டப்பிரிவு 497-இன் படி 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இனி அந்த சட்டப்பிரிவை முழுமையாக ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இதனால் ஆண்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படாது.