இந்தியா

பால், தண்ணீரில் கலப்படம்... ஆந்திர மர்ம நோய்க்கான காரணம் இதுதானா?!

EllusamyKarthik

ஆந்திர மாநிலம் கோதாவரியில் மர்ம நோய் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்கட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட கிராமங்களில் சில தினங்களுக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திடீரென உடல்நலம் குன்றினர். அடுத்தடுத்து மக்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மர்ம நோய் பரவியதாக கூறப்பட்டது. 

குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை என்று இந்த மர்ம நோயின் தாக்கம் இருக்க அச்சம் ஏற்பட்டது. குழந்தைகள் உட்பட பலர் மர்ம நோயால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்ததில், அதில் எந்த வித வைரஸ் தொற்றும் இல்லை என்றும் முடிவுகள் வந்தன. 

உடல்நலக் குறைவுக்கு காரணம் கண்டறியப்படாததால் சுகாதாரத் துறையினர் முகாம்கள் அமைத்து வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். 

ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டே நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வரை அவர்களில் 370 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதேநேரம், நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மேலும் 80 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் குண்டூர், விஜயவாடா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதற்கிடையே, மர்ம நோய் எப்படி பரவியது என்பதை கண்டறிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு ஏலூர் விரைந்தது. இந்தக் குழு அப்பகுதியில் கள ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தது. கூடவே, மாநில அரசின் உத்தரவுப்படி ஏலூர் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் தண்ணீர் மாதிரிகள், மக்கள் வாங்கும் பால் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதேபோல் தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன.  

இந்நிலையில் பரிசோதனையின் முதல்கட்ட முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சோதனையில், கிராம மக்கள் பயன்படுத்திய தண்ணீரிலும் பாலிலும் ஈயம் போன்ற ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. முதல்கட்ட தகவலில் ஈயம் கலந்திருப்பது உறுதியான நிலையில், கலப்படம் எப்படி நடந்தது என்பது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. 

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் இருக்கும் நிலையில், இந்த மர்ம நோய் ஆந்திர மக்களை அச்சம் கொள்ள வைத்தது. ஆனால், தற்போது மருத்துவர்கள் இந்த மர்ம நோய் தொற்று வியாதி இல்லை என்பதால் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.