நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்  File Image
இந்தியா

பாஜக எம்.பிக்களின் சொத்து மதிப்பு 7 ஆயிரம் கோடியா? குற்றவழக்குகள் குறித்து வெளிவந்த அறிக்கை!

PT WEB

நாடாளுமன்ற எம்.பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 385 பாஜக எம்.பிக்களின் சொத்து மதிப்பு மட்டும் 7 ஆயிரத்து 41 கோடி ரூபாய் ஆகும். Association for Democratic Reforms and National Election Watch இணைந்து நாடாளுமன்ற எம்.பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

parliament

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள்!

அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் தேர்தலின்போது எம்.பிக்கள் சமர்ப்பித்த தகவல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும். மொத்தமுள்ள 763 எம்.பிக்களில் , 40 விழுக்காடு அளவிலான 306 எம்.பிக்கள் மீது குற்ற வழக்குகளும் , 25 விழுக்காடு அளவிலான 194 எம்.பிக்கள் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் ஆகியவை தீவிர குற்ற வழக்குகளாக கருதப்படுகின்றன.

இவ்வளவு எம்பிக்கள் மீது குற்றவழக்குகளா?

கேரளாவை சேர்ந்த 23 எம்.பிக்களும், பீஹாரைச் சேர்ந்த 41 எம்.பிக்களும், மஹாராஷ்டிராவை சேர்ந்த 37 எம்.பிக்களும், தெலங்கானாவை சேர்ந்த 13 எம்.பிக்களும், டெல்லியை சேர்ந்த ஐந்து எம்.பிக்களும் வேட்பு மனுதாக்கலின்போது தங்களது மீது பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளை குறிப்பிட்டுள்ளனர்.

தீவிர குற்ற வழக்குகளின் பட்டியலில் பீகாரைச் சேர்ந்த 28 எம்.பிக்களும், தெலங்கானாவை சேர்ந்த ஒன்பது எம்.பிக்களும், கேரளாவைச் சேர்ந்த 10 எம்.பிக்களும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 எம்.பிக்களும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 37 எம்.பிக்களும் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவை ஒத்திவைப்பு

கட்சி அடிப்படையில் பார்க்கும்போது 139 பாஜக எம்.பிக்கள், 43 காங்கிரஸ் எம்.பிக்கள், 14 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள், 5 ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பிக்கள், 6 இந்திய கம்யூனிஸ்ட் எம்.பிக்கள், 3 ஆம் ஆத்மி எம்.பிக்கள், 13 ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள், 3 தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

பாஜக எம்பிக்கள் சொத்து மதிப்பு - ரூ.7,051 கோடி

மொத்தமுள்ள 763 எம்.பிக்களின் சொத்து மதிப்பு மட்டும் 29 ஆயிரத்து 251 கோடி ரூபாய் ஆகும். 385 பாஜக எம்.பிக்களின் சொத்து மதிப்பு 7 ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஆகும். 16 தெலங்கானா ராஷ்டிர சமேதி எம்.பிக்களின் சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 136 கோடி ரூபாய் என்றும் 31 ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பிக்களின் சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 766 கோடி ரூபாய் என்றும் ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

81 காங்கிரஸ் எம்பிக்களின் சொத்து மதுப்பு 3 ஆயிரத்து 169 கோடி ரூபாய் எனவும் 11 ஆம் ஆத்மி எம்பிக்களின் சொத்து மதிப்பு ஆயிரத்து 318 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு எம்பியின் சொத்து 38.33 கோடி ரூபாய் ஆகும்.