கேரளாவில் பெற்றோர்களையும், சகோதரியையும் வீட்டிற்குள் வைத்து பூட்டி சமையல் காஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீ வைத்து விடுவதாக மிரட்டிய இளைஞர். காரணம் என்ன? பார்க்கலாம்
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை அடுத்த அடூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைஞர் ஒருவர் கோபத்தில், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) இரவு, தனது பெற்றோரையும், சகோதரியையும் வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளார். பின்னர், அவுட் ஹவுஸில் இருந்து சமையல் காஸ் சிலிண்டரை எடுத்து வந்தவர் அதன் பைப்பை வீட்டிற்குள் வைத்துவிட்டு காஸை திறந்து விட்டு இருக்கிறார். வீடு முழுவதும் காஸ் பரவியநிலையில், வீட்டிற்கு தீ வைத்து விடுவேன் என்று குடும்பத்தினரை மிரட்டியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் இளைஞரை பிடிக்க முற்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர் கற்களைக் கொண்டு போலிசாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இருப்பினும், போலிசார் இளைஞரை பிடித்து அவரிடமிருந்து அவரது குடும்பத்தினரை மீட்டுள்ளனர்.
குடும்பத்தினரிடம் விசாரித்ததில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரை அறியாமல் இத்தகைய தவறை செய்தார் என்றும் குடும்பத்தினர் கூறியதால், அந்த இளைஞருக்கு எதிராக வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் எச்சரித்து விட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.