பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பெண் திரைப்பட இயக்குநர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கேரள திரைப்படக் கொள்கை மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அடூர் கோபாலகிருஷ்ணன், ”பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுக்க அரசாங்கம் ரூ.1.5 கோடி வழங்குகிறது. ஊழல் செய்ய மக்களுக்கு ஒரு வாய்ப்பை அவர்கள் உருவாக்குகிறார்கள் என்று நான் முதலமைச்சரிடம் சொன்னேன். நோக்கம் நல்லதுதான். ஆனால் அவர்களுக்கு திரைப்படம் எடுக்க குறைந்தபட்சம் மூன்று மாத தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு படம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இது, பொது நிதி. இந்தத் தொகையை ரூ.50 லட்சமாகக் குறைக்க வேண்டும். வணிகப் படங்களைத் தயாரிக்க அரசாங்கம் பணம் கொடுப்பதில்லை. பெண்களுக்கும் இதேதான் நடக்கும். அவர், ஒரு பெண் என்பதற்காக படம் தயாரிக்க பணம் கொடுக்காதீர்கள்”என்று 17 தேசிய விருதுகளைப் பெற்ற கோபாலகிருஷ்ணன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பேசிய கருத்துகள், அவரது உரையின்போதே பார்வையாளர்களிடையே எதிர்ப்புகளைத் தூண்டின. கேரள சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவர் புஷ்பவதி பி.ஆர். அவரது உரையின் நடுவில் குறுக்கிட்டார். இருப்பினும், மலையாள கலைப் படங்களுக்குப் பெயர் பெற்ற கோபாலகிருஷ்ணன், எந்தத் தயக்கமும் இல்லாமல் இருந்தார். அதேநேரத்தில், கோபாலகிருஷ்ணன் மீது சமூக ஆர்வலர் தினு கே புகார் அளித்தார்.
மறுபுறம் இதே நிகழ்வில் பேசிய கலாசார விவகார அமைச்சர் சஜி செரியன், கேரள திரைப்படக் கொள்கையை ஆதரித்தார். அவர், "மலையாள சினிமாவின் 98 ஆண்டுகால வரலாற்றில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் இன்னும் சினிமாவில் முன்னணிக்கு வர முடியவில்லை. இந்த திட்டம் நமது அரசு எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்றாகும். மலையாளத் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களைக் கொண்ட ஒரு திரையிடல் குழு நிதியுதவியைச் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கிறது. மேலும் அந்தப் படங்களைத் தயாரித்தவர்கள் அசாதாரணமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளனர். நூற்றாண்டுகாலமாக ஒதுக்கிவைக்கப்பட்ட பட்டியல் சாதி இயக்குநர்களை ஆதரிக்கும் முடிவிலிருந்து அரசு பின்வாங்காது” என அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.