இந்தியாவைச் சேர்ந்த பதின்ம வயதினர் பிறநாடுகளின் பதின்ம வயதினரைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநாவின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பு 146 நாடுகளை சேர்ந்த 11 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. 2001 முதல் 2016ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் உலகெங்கிலும் உள்ள 80 சதவிகித பதின்ம வயதினர், நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கூட சுறுசுறுப்பாக இருப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள 85 சதவிகித பெண் குழந்தைகளும், 78 சதவிகித ஆண் குழந்தைகளும் சோம்பேறிகளாக உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவை சேர்ந்த பதின்ம வயதினர் விளையாடுவது, வீட்டு வேலைகளை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதால் சுறுசுறுப்பாக உள்ளனர் என அந்த அறிக்கை கூறுகிறது.
குழந்தைகள் மந்தமாகவே இருந்தால் வருங்காலத்தில் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.